×

மாமல்லபுரத்தில் பெண்கள் 20 உச்சி மாநாடு நிறைவு வெளிநாட்டு பிரதிநிதிகளை அசர வைத்த தலைவாழை விருந்து: வடை- பாயாசத்தை ருசித்து உற்சாகம்

சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த பெண்கள் 20 உச்சி மாநாட்டில் வெளிநாட்டு பெண் பிரதிநிதிகளுக்கு சாம்பார், வடை – பாயாசத்துடன் விருந்து அளிக்கப்பட்டது. மாமல்லபுரம் ரேடிசன் புளூ தனியார் ரிசார்ட்டில் 2 நாட்களாக டபிள்யு பெண்கள் 20 உச்சி மாநாடு நடந்தது. இதில், 20 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நேற்று மாலை மாநாடு நிறைவு பெற்றது. முன்னதாக, நேற்று மதியம் தமிழர் கலாச்சாரப்படி வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தலைவாழை இலை போடப்பட்டு சாப்பாடு, சாம்பார், ரசம், மோர் குழம்பு, பூசணிக்காய் மற்றும் கத்தரிக்காய் கூட்டு, கேரட்-பீன்ஸ் பொரியல், பருப்புவடை, பாயாசம் ஆகியவற்றை ரிசார்ட் ஊழியர்கள் வேட்டி-சட்டை அணிந்து பரிமாறினர். வெளிநாட்டு பிரதிநிதிகள் போட்டிப்போட்டுக் கொண்டு வடை, பாயாசத்தை வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

இதுகுறித்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த சியோ சீ ஆண்டர்சன் என்ற பெண் பிரதிநிதி கூறுகையில், ‘‘டபிள்யு பெண்கள் 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. கடந்தாண்டு, இதே ஊரில் 186 நாடுகள் பங்கேற்ற 44வது சதுரங்கப்போட்டி நடந்தது. இதில், எங்கள் நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடினர். சதுரங்கப்போட்டி முடிந்து சொந்த நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகள் தமிழ்நாட்டு உணவு வகைகள் குறித்து விளக்கினர். அப்படிப்பட்ட, தமிழ்நாட்டில் அடங்கிய மாமல்லபுரத்தில் மாநாட்டில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு, தலைவாழை இலை போட்டு பல்வேறு வகையான தமிழக உணவுகள் பரிமாறப்பட்டது.

அத்தனை, உணவுகளும் ருசியாக இருந்தது. குறிப்பாக, வடை – பாயாசம் மிகவும் அருமையாக இருந்தது. இந்த மாதிரி ருசியான உணவை சாப்பிட்டதில்லை. நாங்கள் எங்கள் நாட்டுக்கு போய் சேர்ந்ததும், தமிழக உணவு மற்றும் மாநாட்டில் தமிழக கலாச்சாரம் குறித்து விவாதித்ததை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுவோம்’’ என்றார். மேலும், டபிள்யு பெண்கள் 20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட 20 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பெண் பிரதிநிதிகள் நேற்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை பல்லவ மன்னர்கள் செதுக்கிய புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

The post மாமல்லபுரத்தில் பெண்கள் 20 உச்சி மாநாடு நிறைவு வெளிநாட்டு பிரதிநிதிகளை அசர வைத்த தலைவாழை விருந்து: வடை- பாயாசத்தை ருசித்து உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Women's 20 summit ,Mamallapuram ,Thalaivawaga ,Vadai ,Payasam ,CHENNAI ,Women 20 summit ,talaiwawali ,vadai - payasam ,
× RELATED மேலக்கோட்டையூரில் புதிய காவல்...